புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

எதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள்! அப்படின்னா இது உங்களுக்குதான்.

மசக்கையின்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.. நாமதான் அதுக்கு ஏதாச்சும் பிடிச்சதா பண்ணி சாப்பிணும்.

நெல்லுப்பொரி இருக்குல்ல அதைக் கஞ்சியா காச்சி சாப்பிட்டா குமட்டாது. வாந்தியும் நிக்கும். நல்லா பசி எடுக்கும். இத மட்டும் தொடர்ச்சியா சாப்பிட்டு வந்தால் சரியாப் போகும்.

சிறுநீர் சரியா போகலையா.....

வெயில் அதிகமானதுல இருந்தே சிறுநீர் சரியா போகல... ஒரே கடுப்பா இருக்கு... சிறுநீர் கழிச்சப்புறம் ஒரே எரிச்சல், அடிவயிறு வலி ஊசியால குத்துறமாதிரி இருக்குனு சில பேர் புலம்புவாங்க... ஆனால், நீர்க்கடுப்புக்கு வெயில் மட்டுமே காரணம் இல்ல.. நேரத்துக்கு சாப்பிடாம இருக்குறது. சரியான தூக்கமில்லாம இருக்குறது... தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல்.. இதனாலேல்லாம் தான் நீர்க்கடுப்பு வருது... மொதல்ல இந்த பழக்கங்கள மாத்திக்கணும்...

சீரகம், சோம்பு, வெந்தயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை- இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம். இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்.

வேனல் காலமான இந்த காலகட்டத்துல நெறயா தண்ணி குடிக்கணும்.

நகம் கடிக்கும் குழந்தையா....

எம் பொண்ணு ஓயாம நகம் கடிக்கிறா.... நானும் எவ்வளவோ தடுத்துப் பாத்துட்டேன்.. ஆனா முடியலனு தவிக்கிறங்க தாய்மார்களுக்கு.....

நகம் மேல மருந்து தடவுறது தற்காலிக வைத்தியம்தான்.. நிரந்தரமா அந்த பழக்கம் நிக்கணும்னா வயித்துல இருக்குற கிருமிய வெளியேத்தணும். வயித்துல கிருமி இருக்குற குழந்தைகள்தான் நகத்தக் கடிக்கும். தூங்குறப்போ அரைக்கண் மூடித் தூங்கும். முகம் எப்போதும் வாடிப்போயி வெளிறியே இருக்கும். குழந்த ஏதோ சிந்தனையிலேயே இருக்கும். பதட்டமா இருக்கும். இது எல்லாமே வயித்துல இருக்குற கிருமிக படுத்துற பாடுதான்.

அதனால கிருமிய வெளியேத்திட்டா குழந்த நல்லாயிடும்.

இப்ப இத கவனமா கேட்டுக்கங்க.....

இஞ்சி - 1 துண்டு. முருங்கைப்பட்டை - 1 துண்டு எடுத்து ரெண்டையும் இடிச்சி நல்லா சாறு எடுத்து அந்த சாறோட கொஞ்சம் வெற்றிலை சாறையும், தேனையும் அளவாக் கலந்து 10 நாளுக்கு ஒருதடவ மாதத்துல மூணு தடவை ஒரு வேளைக்கு குடுத்து வாங்க. இப்பிடி மூணு மாசம் குடுத்துக்கிட்டு வந்தால், வயித்துல இருக்குற பூச்சியெல்லாம் தானா வெளியேறிடும்.

நகச்சுத்திக்கு......

விரல்ல நகச்சுத்தி மாதிரி வந்து வீங்கிக்கிட்டு ரொம்ப வேதனப்படுத்துது... ஒடையவும் மாட்டேங்குது.. அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிச்சிட்டுருக்கீங்களா....?

கண்ட தண்ணியவும் குடிக்கிறது.. அளவுக்கு மீறுன அலைச்சல்.. சரியான தூக்கமில்லாதது... இதுனால ஏற்படுற உஷ்ணத்துல வர்றதுதான் இந்த மாதிரி கட்டியெல்லாம்...

சரி இப்ப சொல்ற மருந்த கவனமா கேட்டுக்கங்க...

சின்ன வெங்காயம் 5, கறிமஞ்சள் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, வசம்புப் பொடிதலா 5 கிராம், சுக்கு ஒரு துண்டு, கொஞ்சம் முருங்கை இலை இது எல்லாத்தையும் சேத்து அரச்சி, அதுல எலுமிச்சை சாறு 25 மிலி விட்டு குழச்சி நகச்சுத்தி வந்த இடத்துல பத்து போட்டு, வெள்ளத் துணிய வச்சி கட்டுப்போட்டுக்கிட்டு வந்தால், 1 வாரத்துல எல்லாம் சரியாப்போயிடும்.