தமிழ் இந்து நாளிதழ்-லில் 04.12.2014 அன்று வெளியான தினசரி நாளிதழ்;-ஹெச்முஜிபுர்ரஹ்மான்(அவர்கள்)ஆக்கத்தில் வெளியானது;-
....
சூபித்துவக் கல்வியானது மார்க்கச்சட்டக் கல்வியைப் போன்று வெறும் புத்தகத்தின் வாயிலாகவோ வெளிப்புற அறிவின் (Explicit Knowledge) மூலமாகவோ கற்றுக்கொள்வதை விட உள்ளத்திலிருந்து உள்ளத்துக்கு (Heart to Heart) என்ற முறையிலேயே பெரும்பாலும் கற்பிக்கப்படுகிறது.

 

நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா, “இரண்டு விதமான கல்விகளை நபிகள் நாயகத்திடமிருந்து கற்றுக்கொண்டேன். ஒன்றை மட்டுமே வெளியில் சொன்னேன், மற்றதைக் கூறினால் என் தொண்டை வெட்டப்பட்டுவிடும்” என்பதாக (நூல் - புகாரி) உள்ளது.

அந்த இரண்டு விதமான கல்விகள்தான் வெளிப்புற மார்க்கச் சட்ட கல்வியும், ஆன்மிக சூபிச கல்வியும் ஆகும் என்று மார்க்க மேதைகள் விளக்கம் தருகின்றனர். மார்க்கச் சட்டக் கல்வி இன்றளவிலும் பகிரங்கமாகப் போதிக்கப்படுகிறது, கற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், ஆன்மிகக் கல்வி அவ்வாறு அல்ல. அதற்கு என்று ஒரு சிறப்பான முறை இருக்கிறது.

நபிகள் நாயகம் அன்னவர்களிடம் இருந்து அவர்களது தோழர்கள் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொண்டனர். அவர்களிடம் இருந்து அவர்களுக்குப் பின் வந்தவர்களும், அவர்களிடம் இருந்து அவர்களுக்குப் பின் வந்தவர்களும் என்று வாழையடி வாழையாக இக்கல்வி முறைப்படி போதிக்கப்பட்டு வருகிறது.

தரீக்காக்கள் என்றால் என்ன?

இப்படி நபிகள் நாயகத்திடம் இருந்து இன்று வரை இந்த சூபி ஞானம் வந்து சேர்ந்த அத்தொடரே தரீக்கா (வழி) என்று அழைக்கப்படுகிறது.இஸ்லாத்தில் பல தரீக்காக்கள் உள்ளன. காதிரியா, ரிபாயியா, சிஸ்தியா, நக்ஷபந்தியா, ஷாதுலியா போன்ற இன்னும் பல தரீக்காக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் உண்மையில் இஸ்லாமிய ஆன்மிகப் பள்ளி பாசறைகளே.

அதாவது, சூபித்துவக் கல்வியை நபிகள் நாயகம் அவர்களிடமிருந்து இன்று வரை கொண்டு வரக்கூடிய ஆன்மிகச் சங்கிலித் தொடர்களே ஆகும். இவை பல கிளைகளாகப் பிரிந்து இன்றளவும் உலகளவில் இஸ்லாமிய ஆன்மிகக் கல்வியை மக்களுக்குப் போதித்து கொண்டு உள்ளன. இதன்படி, ஒவ்வொரு தரீக்க்காகளிலும் பல ஆன்மிகத தலைவர்கள் அதாவது, ஆன்மிக ஆசான்கள் இருப்பர். இக்கல்வியைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவன் அவர்களில் ஒருவரிடம் மாணவராக ஆகி அவர் மூலம் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொள்கிறான்.

சூபிசம் மூலம் இறைவனை அடைவது எப்படி?

ஒரு முர்ஷித் (ஆசிரியர்) தன்னிடம் பைஅத் செய்துள்ள மாணவனை இறைவனிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக வழிகாட்டுவார். அவனுக்குத் தேவையான அறிவுரைகள், வழிகாட்டல்களின் மூலம் அவனை நேர்வழிக்குக் கொண்டு செல்லுவார்.அதேநேரம், மாணவனின் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தவும், இறைச் சிந்தனையை அதிகப்படுத்தவும் அம்மாணவனுக்கு முதலில் சில திக்ர்களை (வார்த்தைகளை) சொல்லிக்கொடுத்து அதனை ஓதி வரும்படி கூறுவார். அதேபோல அவர் கூறும் கட்டளைகளை ஒரு மாணவன் முறைப்படி செய்துவருவான். அவை யாவும் முழுக்க முழுக்க அவனை ஒழுக்க சீலனாக ஆக்கவும் இறை அன்பை பெற்ற ஒருவனாக ஆக்கவுமாகவே இருக்கும்.

இப்படித் தொடர்ந்து பயின்று வரும் அம்மாணவனின் ஆன்மிக படித்தரம் அவன் அறியாத நிலையிலேயே உயர்கிறது. அவனின் படித்தரத்திற்கு ஏற்ப அவனுக்கு வழங்கப்படும் கல்வியும் மாறுபடுகிறது. இப்படி ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஒருவனது வாழ்க்கை, வணக்கம், செயற்பாடுகள் அனைத்தும் சாதாரண மனிதர்களது செயற்பாடுகளை விட்டு முற்றிலும் வித்தியாசப்பட்டு இருக்கும். சாதாரண மனிதர்களைப் போன்று உலக ஆசாபாசங்களில் சிக்கி மனதைப் பறிகொடுத்து வாழமாட்டான். போட்டி, பொறாமை, கர்வம், திமிர், நம்பிக்கை மோசடி, அநியாயம் செய்தல், கோபம், குரோதம், தீவிரவாதம் என்று எந்தக் கெட்ட குணம் அவனிடம் இருக்காது.

யாருக்கும் துன்பம் இழைக்க மாட்டான்

உலகத்தில் குடும்பத்தோடும் சக மனிதர்களோடும் வாழுவான். ஆனால் அனைவருக்கும் நல்லது செய்து வாழுவான். நல்லவனாக வாழுவான். பிறருக்கு எந்த விதத்திலும் தன் நாவினாலோ, உடலாலோ துன்பம் இழைக்க மாட்டான். உலகத்தில் அனுமதிக்கப்பட்ட விதத்தில் இன்பம் அனுபவிப்பான். ஆனால், வரம்பு மீற மாட்டான். அதிலேயே தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அடிமையாகிவிட மாட்டான்.

அவ்லியாக்கள் (இறைநேசர்கள்) என்றால் யார்?

இப்படி அவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் செய்துவருகையில் அவரது ஆன்மிகப் படித்தரம் உச்ச நிலையை அடைகிறது. அவர் இறைவனின் நேசத்தை பெற்ற ஒரு இறைநேசராக மாறுகிறார். இத்தகைய சிறப்பு மிக்க மனிதர்களையே முஸ்லிம்கள் “அவ்லியாக்கள்” அதாவது இறைநேசர்கள் என்று சொல்லுகின்றனர். இஸ்லாமிய வரலாற்றில் தொன்றுதொட்டு இன்றுவரை எண்ணிகையில் அடங்காத அவ்லியாக்கள் உலகத்தில் தோன்றி மறைந்து உள்ளனர். இன்னும் தோன்றி கொண்டே இருப்பர்.

உதாரணமாக - பக்தாத்தில் வாழ்ந்து அடங்கப்பெற்ற ஷெய்க் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி வலியுல்லாஹ், அஜ்மீரில் வாழ்ந்து அடங்கப்பெற்ற ஷெய்க் காஜா முயினுத்தீன் சிஸ்தி வலியுல்லாஹ், நாகூரில் வாழ்ந்து அடங்கப்பெற்ற நாகூர் ஆண்டகை ஷெய்க் ஷாஹுல் ஹமீத் வலியுல்லாஹ், கொழும்பில் அடங்கப்பெற்றுள்ள ஷெய்க் உஸ்மான் வலியுல்லாஹ் ஆகிய அனைவரும் அவ்லியாக்களுக்கு உதாரணங்கள்.

இந்த இறைநேசர்கள் சில நேரங்களில் இறைவனின் அருளைக் கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்துகின்றனர். அவை முஸ்லிம்களால் “கராமத்” என்று சொல்லப்படுகிறது. அவை இறைவன் தன் நேசர்களுக்குக் கொடுத்துள்ள வெகுமதியாகும்.இந்த இறைநேசர்கள் மதம், இனம், மொழி, நாடு என எவ்வித வேறுப்பாடும் இன்றி எல்லா மனிதர்களாலும் நேசிக்கப்படுகின்றனர். இவர்களது அடக்கஸ்தலங்களுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த பல்வேறு மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் போய் வருகின்றனர். அந்த அடக்கஸ்தலங்கள் “தர்கா” என்று சொல்லப்படுகின்றன. அம்மனிதர்கள் தமது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் அங்கே சென்று அந்த இறைநேசரிடம் முறையிடுகின்றனர். அந்த இறைநேசர் அது சம்பந்தமாக இறைவனிடம் பிரார்த்தித்து அம்முறையீடு ஏற்றுக்கொள்ள வழிவகுக்கிறார்கள்.

அப்போது அந்த இறைநேசர் மதம், மொழி, நாடு என எந்த ஒரு வேறுப்பாடும் காட்டுவதில்லை. அவர்களின் உயரிய பண்புகளாலும் நற்குணத்தாலும் கவரும் மக்கள் அவர்கள் மீது கொள்ளும் அளவில்லாக் காதல் அம்மக்களை இஸ்லாத்தை நோக்கி வர வைக்கின்றன.